News

கோவை உக்கடத்தில் ரூ.460 கோடியில் ரெடியான பிரம்மாண்ட மேம்பாலம்.. முதல்வர் திறந்து வைக்கிறார்

கோவை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் வணிக பகுதியான உக்கடத்தில் ரூ.460 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க கோவை வரும் முதல்வர், இந்த பாலத்தை திறந்து வைக்கிறார்.

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம் என்றால் அது கோயம்புத்தூர் தான். கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நகரம் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதேபோல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஏராளமானவை கோவையை சுற்றிலும் உள்ளன. பல ஆயிரம் மாணவர்கள் கல்லூரி படிப்பை படிக்க விரும்பும் நகரமாக கோவை தான் திகழ்கிறது. கோவை முழுவதும் ஏராளமான புகழ் பெற்ற கல்லூரிகள் உள்ளன. இதுதவிர கடந்த 15 வருடங்களில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கோவையில் களம் இறங்கி உள்ளன.

கோவை என்பது கேரளாவின் நுழைவு வாயிலாக இருப்பதால், பலர் இங்கு வந்து தொழில் செய்கிறார்கள். ஏராளமான கேரள மக்கள் வசிக்கும் இடமாக திகழ்கிறது.. இதேபோல லட்சக்கணக்கான வட இந்தியர்களும் கோவையில் வசிக்கிறார்கள். கோவையில் தமிழ்நாட்டின் ஏராளமான மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் குடிபெயர்ந்து வருவதால், மக்கள் தொகை கடந்த 20 வருடங்களில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. கோவையின் புறநகர் பகுதிகள் எல்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன.

இதன் காரணமாக கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே கோவை நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம்-ஆத்துப்பாலம், திருச்சி ரோடு ஆகிய சாலைகளில் மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது.

அதன்படியே அவினாசி ரோட்டில் 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி 2 கட்டங்களாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. மொத்தம் ரூ.460 கோடியில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது முழுமையாக நிறைவடைந்து விட்டது. இதில் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் செல்லும் சாலையில் ஏறுதளம், இறங்குதளம் மட்டும் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. மீதம் உள்ள அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.

உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த மேம்பாலத்தை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க கோவைக்கு வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி வருகிறார். கோவை அரசு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர்,உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தையும் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.. மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம், கோவை வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, கோவை கடலைக்கார சந்தில் புதிதாக கட்டப்பட்ட ஆதரவற்றோர் தங்கும் விடுதி, கோவை புலியகுளம் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அரசு துறை செயலாளர்கள் செய்து வருகிறார்கள்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button