விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்.. கோவை மாநகரில் இன்று எந்த பக்கம் எல்லாம் போகவே கூடாது.. முழு விவரம்
கோவை: கோவை மாநகரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக நடைபெறும் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “கோவை மாநகரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.
உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சவீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இதேபோல் உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரெயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எஸ்.ஆர். ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு ஏ.ஆர்.சி. சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் விநாயகர் சிலை ஊர்வலம் வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல் தியேட்டரை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழி சாலை வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். பேரூர் சாலையிலிருந்து தடாகம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, பனமரத்தூர், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி ரோட்டில் இடதுபுறமாக திரும்பி தடாகம் சாலையில் செல்லலாம்.
விநாயகர் சிலை ஊர்வலப் பாதைகளான ராஜவீதி, ரங்கே கவுண்டர் வீதி, பெரியகடைவீதி, வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார் பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தெப்பக்குளம் மைதானம், பூமார்க்கெட் ரோடு, பால் மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி.ரோடு, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” இவ்வாறு கோவை போலீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.