வயிறு வலிக்காக எடுத்துக்கொண்ட மருந்து.. பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த சோகம்.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை அரசு மருத்துவமனையில் வயிறு வலிக்காக பயிற்சி மருத்துவர் மருந்து எடுத்துக்கொண்ட நிலையில் ஓய்வறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அவர் மயக்க மருந்து எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காய்ச்சல், இருமல், சளி, வயிறு வலி என எந்தவிதமான உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் மருந்தகங்களில் சொல்லி மருந்துகளை உட்கொள்ளும் வழக்கம் பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. முறையான மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல் இதுபோன்று மருந்துகள் உட்கொள்ளப்படுவதால் பல்வேறு உயிரிழப்புச் சம்பவங்களும் நேரிட்டு வருகின்றன.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் வயிறு வலிக்காக மருந்து எடுத்துக்கொண்ட பயிற்சி மருத்துவர் உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மயக்க மருந்து அதிகமாக எடுத்துக் கொண்டதால் பயிற்சி மருத்துவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல தனது உறவினர் வீட்டில் இருந்து மதுக்கரை மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.
அப்போது, அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து எடுத்துக் கொள்வதாகவும் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் கூறியதாகத் தெரிகிறது. மருந்து எடுத்துக்கொண்ட பின்னர் பயிற்சி மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சந்தோஷ் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் ஓய்வறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, சிறிது நேரம் பார்த்துவிட்டு சந்தோஷ் அறையில் இருந்து வெளியே வராததால் சக பயிற்சி மருத்துவர்கள் ஓய்வறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மருத்துவர் மூச்சு பேச்சின்றி சந்தோஷ் கிடந்துள்ளார். சந்தோஷ் உயிரிழந்துள்ளது தெரியவந்ததை அடுத்து செவிலியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சந்தோஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சந்தோஷ் ஊசி மூலம் அதிக அளவில் மயக்க மருந்து எடுத்துக் கொண்டதால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயிறு உபாதைக்காக மருந்து எடுத்துக் கொண்டதில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.