கோவையில் பாரத் நெட் திட்டம்.. திடீரென வந்த புதிய பிரச்சனை.. கலெக்டர் கிராந்திகுமார் கடும் எச்சரிக்கை
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்லும் பணியை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை கேபிள் 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
கண்ணாடி இழை கேபிள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல கூடாது என இடையூறு செய்கின்றனர். இந்த திட்டம் முழுமையாக அரசின் திட்டமாகும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது.
எனவே ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்ய கூடாது. மேலும் விளைநிலங்கள் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் கொண்டு செல்லப்படும் போது பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எவ்விதமான உலோக பொருட்களும் இல்லை, எனவே இதனை திருடி சென்று காசாக்கலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம்.
இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். எனவே இந்த திட்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள், கண்ணாடி இழை கேபிள்களை கொண்டு செல்ல தடை விதிக்கும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது” இவ்வாறு கோவை கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.