வெள்ளலுார் குப்பை கிடங்கு வழக்கு; அறிக்கை சமர்ப்பிப்பு! பசுமை தீர்ப்பாயத்தில் அக்., 16ல் விசாரணை
கோவை;வெள்ளலுார் குப்பை கிடங்கு தொடர்பான வழக்கில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கோவை மாநகராட்சி சார்பில், 98 பக்கத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வழக்கு அக்., 16க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 150 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
நிலத்தடி நீர் பாழ்பட்டது; சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசடைந்தது. குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், குறிச்சி – வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் ஆகியோர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பயங்கர தீ விபத்து
இச்சூழலில், கடந்த ஏப்., 6ம் தேதி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது; தொடர்ந்து நான்கு நாட்கள் தீப்பற்றி எரிந்ததால், சுற்றுப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயாம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்தது.
பின், இவ்வழக்கை சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றியது. இவ்வழக்கு செப்., 3ல் (நேற்று) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக, முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னை தொடர்பாக விவாதித்தனர். குப்பை அழிப்பு, மின்சாரம், உரம் தயாரிப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து, 98 பக்கத்துக்கு விரிவாக செயல் திட்ட அறிக்கை தயாரித்தனர். மாநகராட்சி கமிஷனர், பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
மாநகராட்சி தரப்பில் நகர பொறியாளர் அன்பழகன், நகர் நல அலுவலர் (பொ) பூபதி, உதவி பொறியாளர்கள் ரவிக்கண்ணன், ஜீவராஜ் உள்ளிட்டோர் நேற்று ஆஜராகினர். வழக்கு விசாரணை அக்., 16ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பட்டியலிடப்பட்டது.