ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை நிகழ்ச்சியில் கைகலப்பு.. சுத்தமா பாதுகாப்பு இல்லை.. கோவையில் என்ன நடந்தது?
கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரி நிகிழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். இந்த இசைக் கச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது தான் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு. ராப் பாடலை எழுதி பாடுபவர் ஆதி. அதற்கு ஜீவா மெட்டு போடுவார். இந்த இரு இசைக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டதுதான் ஹிப்ஹாப் தமிழா. ஆரம்பகட்டத்தில் ஆதி என்றால் யாரென்றே பெரும்பாலானோருக்குத் தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் கிளப்புல மப்புல பாட்டை சாதாரணமாகப் பாட அந்த காணொலி பல லட்சம் பேரை சென்றடைந்து வைரலாகியது.
தற்சார்புள்ள இசைக் கலைஞர்களாக இருந்த இவர்கள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசைக் கலைஞர்களில் ஒருவராக மாறியுள்ளனர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ள இவர், மீசைய முருக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
சமீபத்தில் தனது 8 வது படத்தின் பெயரை ஹிப்ஹாப் ஆதி அறிவித்தார். இந்தப் படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இப்படத்துக்கு கடைசி உலகப் போர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி முன்னணி நடிகராக வலம் வந்தாலும் இவரது இசைக்கே இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. ஹிப்ஹாப் ஆதி பல இடங்களில் தற்போது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், தனது சொந்த மண்ணான கோவை மண்ணில் அவரது இசைநிகழ்ச்சி நடைபெற்றது. கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இந்த இசைநிகழ்ச்சியில் ஆதி பாடிக் கொண்டிருந்தபோதே மாணவர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று ஹிப் ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். வெளிநாட்டில் நடைபெறும் இசைநிகழ்ச்சிகளைப் போல 300 அடி ரேம்ப் அமைத்து ஹிப் ஹாப் தமிழா அதில் நடந்து வந்து பாட்டு பாடி நடனமாடினார்.
அப்போது, திடீரென ஹிப் ஹாப் தமிழா பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பயங்கர தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் அங்கு வந்து கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை வெளியேற்றினர்.
இந்நிலையில், ஹிப்பாப் தமிழா இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாகவும், கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற இசைநிகழ்ச்சியில் அதிகம் கூடுவதால் பிரச்னைகள் அதிகரித்து உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.