கோவை, கிருஷ்ணகிரி, தானே முதல் அசாம் வரை.. பாலியல் கொடூரர்கள் பிடியில் குழந்தைகள்.. தீர்வு என்ன?
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே எல்கேஜி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை, அசாமில் பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர், கோவை மாவட்டம் சிறுமுகையில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர். இவை அனைத்தும் பள்ளி குழந்தைகளுக்கு எதிராக கடந்த ஒருவாரத்தில் நடந்த பாலியல் குற்றங்கள்.
இதுதவிர உத்தரப்பிரதேசத்தில் சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா, உத்தரகாண்டில் சிறுமியை பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். மேற்கு வங்க பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலையின் அதிர்ச்சியில் இருந்தே தேசம் மீளவில்லை. அதற்குள் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள் அதிகரித்து பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
வீடு தொடங்கி பள்ளிகள் வரை எந்த இடமும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதையே ஒவ்வொரு சம்பவமும் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன, இவற்றுக்கு தீர்வு என்ன.
இதுகுறித்து குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “குழந்தைகளுக்கு எதிராக உடல் ரீதியான, மன ரீதியான, பாலியல் ரீதியான, புறக்கணிப்பு ரீதியான தொழில்நுட்ப ரீதியான என்று ஐந்து வடிவங்களிலான வன்முறைகள் உள்ளன. இவற்றில் பாலியல் வன்முறை தான் மிகவும் கொடுமையானது. அதை அனைத்து வகையான வன்முறைகளின் தொகுப்பு என்றும் சொல்லலாம்.
ஆனால், பாலியல் ரீதியான வன்முறை குறித்து வெளியில் எதார்த்தமாக சொல்லப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இப்போது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடக்கத்தில் இருந்தே அதிகமாக தான் உள்ளது. 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி 53 சதவீத குழந்தைகள் ஏதாவது வகையில் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றில், இரண்டு குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர். குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான் பாலியல் வன்முறையில ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. பலரும் பலாத்காரம் செய்வதை மட்டுமே பாலியல் வன்முறையாக பார்க்கிறார்கள்.
அசிங்கமாக பேசுவது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது, ஆபாசமான படங்களை காண்பிப்பது, உடை இல்லாமல் நிற்பது உள்ளிட்ட எல்லாமே பாலியல் வன்முறை தான் என்று போக்சோ சட்டம் சொல்கிறது. பாலியல் வன்முறை ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை. அப்படி நடப்பது மிகவும் அரிது. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளிடம் நெருங்கி பழகி பிடிக்க வைத்து படிப்படியாக பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாலியல் வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளன. ஆனால், எத்தனை பேருக்கு தண்டனை கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். பலர் நம்பி வெளியில் வந்தும் அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. பாலியல் வன்முறைக்குள்ளானவர்களில், பெரும்பாலும் சமூக சிக்கலில் பாதிக்கப்பட்ட பின்புலம் கொண்ட குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் நம் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல், நம்பாமல் அந்த பெரியவர்களை நம்புகிறோம்.
குழந்தைகளை குற்றவாளிகளாக்காமல் நட்புரீதியாக பழக வேண்டும். குற்றவாளி போல பேசினால், குழந்தைகள் அதை வெளியில் சொல்வதற்கு தயங்குவார்கள். வளரும் பருவத்தில் பாலின உறுப்பு மாற்றம் ஏற்படும்போது, குழந்தைகளுக்கு இன கவர்ச்சி வருவது இயற்கை. அதை பெற்றோரும் சொல்லாமல், பள்ளிக் கூடங்களிலும் சொல்லாமல் குழந்தைகளுக்கு யார்தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
இதை நெறிப்படுத்தாமல் விட்டதால் தான், தமிழ்நாட்டில் இளம் வயது கற்பம் அதிகரித்துள்ளது. இளம் வயது கற்பம் என்றாலே பாலியல் வன்முறை தான். சட்ட, திட்டங்கள் கடுமையாக இருந்தாலும், ஏதாவது சம்பவம் நடந்தப் பிறகுதான் அந்தப் பிரச்னையை கவனத்தில் கொள்கிறோம்.
கிருஷ்கிரியில் மாணவி வன்கொடுமை சம்பவம் நடந்தவுடனே பள்ளியில் ஆய்வு செய்கின்றனர். இது நடக்காமல் பார்த்துக் கொள்வதுதானே அரசாங்கத்தின் பணி. பள்ளிக் கூடங்களில் மதிப்பீடு சார்ந்த கல்வி, பாலின நீதி, பாலின சமத்துவம் தொடர்பான கல்வி இரு பாலருக்கும் கொடுக்க வேண்டும். உடலில் ஏற்படும் மாற்றங்களையும், யார் எங்கு தொடலாம், எங்கு தொடக்கூடாது, அதாவது பாதுகாப்பான தொடுகை, பாதுகாப்பற்ற தொடுகை குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற தொடுகை நடக்கும்போது, அதை எப்படி மறுப்பது, அதை உடனடியாக யாரிடம் சொல்வது என்று சொல்ல வேண்டும்.
கிராம அளவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த, அந்தந்த கிராம அளவில் உள்ள அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை உருவாக்கி நடைமுறைபடுத்த வேண்டும். பள்ளிகளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதுடன், பள்ளி முதல்வர் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடந்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியரை அரசாணை எண் 121-2012 இன் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் சான்றிதழும் ரத்து செய்யப்படும். அவர் வேறு எங்கும் பணியில் சேர முடியாது. பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டி இருக்க வேண்டும். அதில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்சோ சட்டம் அமலாக்கத்தை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மட்டும் தான் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றம் வரவேண்டும். அப்போதுதான் வழக்கு விசாரணை வேகமாக நடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். மாநில அளவில் போக்சோ வழக்குகளை மாநில குழந்தைகள் உரிமை அமைப்பு தான் கண்காணிக்கும்.
கடந்த மூன்று வருடங்களாக அந்த அமைப்பு செயல்படுவதில்லை. அந்த அமைப்புக்கு நல்ல வலுவான தலைவர், உறுப்பினர்களை நியமித்து நிதி ஒதுக்கி வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு செய்யும் செலவை செலவாக பார்க்காமல் முதலீடாக பார்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் நேய சமுகத்தை உருவாக்க முடியும்.” என்றார்.