FoodsNews

கோவை பிரியாணி சாப்பிடும் போட்டி.. ஆட்டிசம் பாதித்த மகனின் தந்தைக்கு உதவிய யூடியூபர் இர்பான்

கோவை: கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவ செலவிற்காக பணம் சேர்ப்பதற்காக கலந்துகொண்ட கணேசமூர்த்தி என்ற நபருக்கு பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் யூடியூபர்கள் பலர் நிதியுதவி அளித்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் என்பவர்தான் குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் சிக்கன் பிரியாணி சேலஞ்ச் குறித்து பகிர்ந்திருந்தார்.

அதாவது அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும் அறிவித்திருந்தார். அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை. இலவசமாக கலந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். 

இதன் காரணமாக கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹோட்டலில் குவிந்தனர். இந்தப் போட்டியில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் சேர்ப்பதற்காக பிரியாணி சேலஞ்ச் போட்டியில் ஓட்டுநர் ஒருவரும் கலந்துகொண்டார். 

அளவுக்கு அதிகமான குவான்டிட்டி காரணமாக இப்போட்டியில் யாராலும் நிர்ணயிக்கப்பட்ட 6 பிளேட் அளவிலான பிரியாணியை சாப்பிட முடியவில்லை. இதைத்தொடர்ந்து, போட்டியில் அதிகமாக சாப்பிட்டவர்களை வரிசைப்படுத்தி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இப்போட்டியில், கூலி தொழிலாளியான சதீஸ் என்பவர் 3 பிளேட் பிரியாணி சாப்பிட்டு 1 லட்சம் பரிசு பெற்றார்.

வாடகை கார் ஓட்டுநரான கணேசமூர்த்தி 2 மற்றும் அரை பிளேட் பிரியாணி சாப்பிட்டு 50 ஆயிரம் பரிசு பெற்றார். இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவச் செலவுக்காக இந்த பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டார். ஆட்டோ ஓட்டுநரான கிரண் என்பவர் 2 மற்றும் கால் பிளேட் பிரியாணி சாப்பிட்டு 25 ஆயிரம் பரிசு பெற்றார். 

இந்நிலையில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக கார் ஓட்டுநர் கணேசமூர்த்தி கலந்துகொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பான இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டா, முகநூல் என அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக பிரியாணி போட்டியில் கலந்துகொண்ட கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு யூடியூபர் இர்பான் நிதியுதவி செய்துள்ளார். சோஷியல் மீடியா மூலமாக சக யூடியூபர்கள் மற்றும் இர்பான் இணைந்து திரட்டிய 1,05,000 ரூபாய் நிதியுதவியை குழந்தையின் மருத்துவ செலவுக்காக அளித்துள்ளார்.

புட் இன்பர்மேஷசன் சூர்யா 10 ஆயிரமும், பெப்பா ஃபுட்டி கணேஷ் 5 ஆயிரமும், இப்ரிஷ் 5 ஆயிரமும், இன்னைக்கு என்ன சமையல் சுனிதா 10 ஆயிரமும், டேன் ஜேஆர் விலாக்ஸ் சேனலின் டேன் ஜேஆர் 25 ஆயிரமும் என 55 ஆயிரம் ரூபாயும், இதுதவிர இர்பான் 50 ஆயிரமும் என சேர்த்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை கணேசமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கி உதவியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button