கோவை மக்களே அலர்ட்.. இந்த வழியா போகாதீங்க.. இன்று போக்குவரத்து மாற்றம்
கோவை: விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெறவுள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் ஊர்வலங்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் எந்தெந்த மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்த பின்னர் மூன்றாம் நாள் மற்றும ஐந்தாம் நாள்களில் விநாயகர் சிலைகளை குளக்கரைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
கோவை மாநகரில் இன்று (செப்டம்பர் 19) விநாயகர் சிலை ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுவதாலும், மேலும் 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு நேரத்திற்கு தகுந்தாற்போல கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள்: விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.
பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் வாகனங்கள்: பொள்ளச்சி சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஈச்சனாரியில் யூடர்ன் செய்து செட்டிபாளையம் ரோடு வழியாக ஜிடி டேங்க், ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு. போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
பொள்ளாச்சி சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.