Business

சென்னையில் நடைபெறும் ‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள்

தமிழ்நாட்டில் உருவாகி வளரும் ஸ்டார்ட் அப்’களை ஊக்குவிக்கும் முன்னணி தளமான யுவர்ஸ்டோரி சென்னையில் நடத்தும் ‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ (Tamil Nadu Story 2024) நிகழ்ச்சிக்கான கவுண்டவுன் துவங்கியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறையின் முன்னணி பேச்சாளர்கள் பங்கேற்று, தாக்கம் மிகுந்த உரைகளை நிகழ்த்த உள்ளனர். மேலும், சிந்தனையைத்தூண்டும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் சூழலை வடிவமைக்கும் முக்கிய போக்குகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள், முக்கிய முதலீட்டாளர்கள், மாற்றத்தை ஏற்படுத்தி வரும் தலைவர்கள் இந்நிகழ்வின் முக்கியப் பேச்சாளர்களாக உள்ளனர்.

‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ள முன்னணி பேச்சாளர்கள் இதோ:

Tamil Nadu Story 2024

லட்சுமி நாராயணன், வேந்தர், Krea பல்கலைக்கழகம் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்

லட்சுமி நாராயணன் தொழில்நுட்பத் துறையில் 35 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். அண்மை ஆண்டுகளில் காக்னிசண்ட் நிறுவன இயக்குனர் குழுவில் நிர்வாக மற்றும் தலைமை பதவியில் பணியாற்றியுள்ளார்.

உயர் கல்வித்துறையில் துடிப்பாக செயல்பட்டு வருபவர், தொழில்நுட்பக் கல்வியறிவு, தரவு கல்வியறிவு மற்றும் திறன் வளர்ச்சிக்கான புதிய வழிகளை கண்டறிந்து வருகிறார். Krea பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் இவர், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வகையில் கலை, அறிவியல், நிர்வாக கல்வி இணைந்த புதுமையான பாடத்திட்டத்தை இந்த பல்கலைகழகத்தில் பின்பற்ற வழிவகுத்துள்ளார்.

ஐசிடி அகாடமி, சென்னை கணித கழகம் மற்றும் தியாகராஜர் நிர்வாக பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு உயர் கல்வி வளர்ச்சியில் பங்களித்துள்ளார். சைல்டு டிரஸ்ட் மருத்துவமனை மற்றும் வேளாண்மை, திறன் வளர்ச்சி, ஐடி துறை சார்ந்த துறைகளில் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட தொண்டு நிறுவனங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னை ஏஞ்சல்ஸ் மற்றும் TiE அமைப்பு வாயிலாக இளம் தொழில்முனைவோர்களுக்கு ஏஞ்சல் முதலீடு அளித்து ஸ்டார்ட்-அப்’களை ஊக்குவித்து வருகிறார்.

டி.சி.மீனாட்சிசுந்தரம், நிறுவனர், துணை தலைவர், Chiratae Ventures

டி.சி.மீனாட்சிசுந்தரம் இந்தியாவின் முன்னணி வென்சர் கேபிட்டல் நிறுவனம் Chiratae Ventures பின்னால் உள்ள தொலைநோக்கு மிக்க மனிதராக விளங்குகிறார். ‘TCM’ என அறியப்படும் மீனாட்சிசுந்தரம், நிதித்துறையில் தனது பணி வாழ்க்கையை துவக்கி, விப்ரோ மற்றும் வால்டன் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் உயர் பதவி வகித்துள்ளார். நாட்டின் நிதி பரப்பு தொடர்பான இவரது ஆழமான புரிதல் பின்னர் தொழில்முனைவு பயணத்தில் உதவியது.

2006ம் ஆண்டு, இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய Chiratae Ventures நிறுவனத்தைத் துவக்கினார். தொழில்முனைவு திறமைகளை ஊக்குவிப்பதோடு பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிப்பதும் நோக்கமாக அமைந்தன. அவரது தலைமையில் நிறுவனம், ஃபிளிப்கார்ட், மிந்த்ரா, ஃபர்ஸ்ட்கிரை, லென்ஸ்கார்ட், கியூர்பிட் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது.

வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதோடு, பல்வேறு தொழில் மாநாடுகளில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். விடாமுயற்சி மற்றும் தோல்விகளில் இருந்து பாடம் கற்பதில் நம்பிக்கை கொண்டவர். நோக்கத்தில் கவனம் செலுத்துவது, விடாமுயற்சி, மாற்றத்திற்கு ஈடுகொடுத்து கற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை இளம் முனைவோருக்கான அறிவுரையாக வழங்குகிறார்.

சுரேஷ் கல்பாத்தி, சி.இ.ஓ, வெராண்டா லேர்னிங் மற்றும் கல்பாத்தி இன்வெஸ்ட்மண்ட்ஸ், இயக்குனர், ஏஜிஎஸ் சினிமாஸ்

திரைப்படத்துறை அதிபர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் தனது புதுமையாக்கம் மூலம் தாக்கம் செலுத்தி வருபவர் சுரேஷ் கல்பாத்தி. சகோதரர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஐடி பயிற்சி நிறுவனம் எஸ்.எஸ்.ஐ நிறுவனத்தை துவக்கி, இந்திய ஐடி மற்றும் கல்வித்துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளார். சென்னையைச் சேர்ந்த கல்வி நுட்ப நிறுவனம் ‘வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ சி.இ.ஓவாக விளங்குகிறார்.

கல்பாத்தி குழுமம் தனது கல்பாத்தி இன்வெஸ்ட்மண்ட்ஸ் மூலம், இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது. திரைத்துறையில் ஏஜிஎஸ் பேனர் மூலம் திரைப்படத் தயாரிப்பு, விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

சி.கே.குமாரவேல், நேச்சுரல்ஸ் சலூன் அண்ட் ஸ்பா இணை நிறுவனர், சி.ஒ.ஓ

பெண்கள் தொழில்முனைவை ஊக்குவிப்பதில் முன்னோடியாக இருப்பதில் துவங்கி, அவர்களின் நிதி சுதந்திரத்தை வலியுறுத்துவது வரை சி.கே.குமாரவேல், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், சிறிய நிறுவனம் ஒன்றை துவக்கி, இந்தியா முழுவதும் 650 மையங்கள் கொண்ட மாபெரும் நிறுவனமாக மாற்றி சலூன் துறையில் முன்னோடியாக விளங்குகிறார். 2000-மாவது ஆண்டில், 30 லட்சம் முதலீட்டில் மனைவி வீணா குமாரவேலுடன் இணைந்து நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தை துவக்கினார். இன்று, மிகப்பெரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் சலூன் சங்கிலித்தொடராக இது மாறியுள்ளது.

ஸ்ரீநாத் ரவிசந்திரன், இணை நிறுவனர், சி.இ.ஓ, அக்னிகுல் காஸ்மோஸ்

ஸ்ரீநாத் ரவிசந்திரன், உலகின் முதல் முழுவதும் 3டி முறையில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை உருவாக்கிய அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் நிறுவனர். இந்த 3டி அச்சிடப்பட்ட எஞ்சினுடனான முதல் ராக்கெட்டை இந்தாண்டு மே 30ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது அக்னிகுல். 2017ல் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் மற்றும் மொயின் எஸ்.பி.எம் இணைந்து இந்நிறுவனத்தை துவக்கினர். விண்வெளி ஆய்வை அனைவருக்கும் அணுகல் தன்மை கொண்டதாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘அக்னிபான்’, 100 கிலோ எடை கொண்ட பிளேலோடை பூமியின் தாழ்வான வட்டப்பாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. அக்னிகுல் நிறுவனத்திற்காக சர்வதேச விண்வெளி சமூகத்தில் பல பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். ராக்கெட்டை மட்டும் அல்லாமல் புதிய தலைமுறை புதுமையாக்க முனைவோரை உண்டாக்கி வருகிறார். இளம் தொழில்முனைவோர், மாணவர்களுடன் ஆர்வத்தோடு உரையாடி வருகிறார்.

மதன் கவுரி, யூடியூபர், இன்ஃப்ளுயென்சர் மற்றும் நிறுவனர், சி.இ.ஓ, mCholas

தென்னிந்தியாவின் மிகப்பெரிய உள்ளடக்க உருவாக்குனர்களில் ஒருவரான மதன் கவுரி, சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் mCholas நிறுவனராகவும் விளங்குகிறார்.

தனது யூடியூப் சானல் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் பல தலைப்புகளில் பேசி வருகிறார் மதன். 500க்கும் மேற்பட்ட பிராண்ட்களை மறு வரையறை செய்து தென்னிந்திய சமூக ஊடக உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வரலாறு, தொழில்நுட்பம், நடப்பு நிகழ்வுகள் தொடர்பான சிக்கலான தலைப்புகளை சுவாரஸ்யமான முறையில் வழங்குவதற்காக இவர் அறியப்படுகிறார். 10 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட டிஜிட்டல் சமூகத்தை உருவாக்கியுள்ளார் மதன் கவுரி.

மற்ற முக்கிய பேச்சாளர்கள்

  • குப்புலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, குலோபல் ஹெட், ஜோஹோ பார் ஸ்டார்ட் அப்ஸ் – எதையும் எளிதாக விளக்கிச்சொல்லும் கருத்தாக்கத்தில் நம்பிக்கை கொண்டவர். ஜோஹோவில் ஸ்டார்ட் அப் திட்டத்தை வழிநடத்துகிறார்.
  • சுரேஷ் ராதாகிருஷ்ணன், Mypreneur நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. – தொடர் தொழில்முனைவர், படைப்பாளி மற்றும் வணிக பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட இவர், ஆர்வமுள்ள மற்றும் ஆரம்பகால வணிக நிறுவனர்களுக்கு லாபகரமான வணிகத்தை உருவாக்க உதவுகிறார்.
  • பிரபு ராமசந்திரன், நிறுவனர், சி.இ.ஓ, Facilio Inc. – கட்டிடங்களில் முக்கிய பிரச்சனையான செயல்திறன் இல்லாத பராமரிப்புக்கு தீர்வு வழங்கி வருகிறது இவரது Saas நிறுவனம்.
  • தரணிதரன்.ஜி.டி, நிறுவனர், சி.இ.ஓ, சோஷியல் ஈகிள், நிறுவனர், 21DC Community. தரவுகள், வாடிக்கையாளர்கள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்தவையாக விளங்க பிராண்ட்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்கி உதவி வருகிறார்.

சென்னை ஹயாத் ரெஸிடன்சியில் ஜூலை 19 ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு ஸ்டோரி 2024 நிகழ்ச்சியில் இந்த ஊக்கம் மிகுந்த தலைவர்களின் உரையை கேட்கத் தயாராகுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button