புறம்போக்கு நிலம், மனைப்பட்டா.. மொத்தமும் ரெடி.. கோவை ஏர்போர்ட் வருது.. சொன்னதை செய்துட்டாரே ஸ்டாலின்
கோவை: கோவை மாவட்டம் தொழில் துறை வளா்ச்சியில் அசுர வேகமெடுக்கும் என்று தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.. அத்துடன் கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் குறித்தும முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
கோவை மாநகராட்சி அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.. மாநகரை சுற்றிலும் ஏகப்பட்ட ஐடி கம்பெனிகள், புது புது தொழில் நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள் என நிறைந்து வருகின்றன..
கோவை வளர்ச்சி: இனிவரும் நாட்களில் இவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.. இதனால், கோவையை மையப்படுத்தி, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானோர் படையெடுத்து வரக்கூடிய நிலைமை உள்ளது.
அதனால்தான், கோவையில் சிறந்த கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது… ஆனால், விமான வசதிகள் மட்டும் போதுமான அளவுக்கு கோவையில் இல்லை.. சென்னை, பெங்களூரு, டெல்லி என உள்நாட்டிலேயே பயணிப்பதற்குதான் விமானங்கள் உள்ளதே தவிர, வெளிநாட்டினர் வந்துசெல்வதற்கான விமானங்கள் அவ்வளவாக இல்லை.. இதற்கான இடவசதிகளும் கோவை ஏர்போர்ட்டில் இல்லை.
விரிவாக்கம்: எனவேதான், கோவை ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக விமான ஓடுதள தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது.. இதற்காக 632 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியிலும் அதிரடியாக இறங்கியது.
சில நாட்களுக்கு முன்புகூட, கணபதி ராஜ்குமார் எம்.பி. தலைமையில், விமான நிலைய விரிவாக்க பணிகள் பற்றின ஆலோசனை கூட்டம் கோவை ஏர்போர்ட்டிலேயே நடந்தது. விமான நிலைய விரிவாக்க பணியை மேற்கொள்ள நிலம் கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாகவே பேசப்பட்டது.
புறம்போக்கு நிலம்: இதற்காக சிங்காநல்லூர், இருகூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் போன்ற இடங்களில் மொத்தம் 632.95 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறதாம். இதில் 468.83 ஏக்கர் நிலம் தனியார் பட்டா நிலங்கள், 134.32 ஏக்கர் நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது.. மிச்சமுள்ள 29.82 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலமாகும்..
பட்டா நிலத்தில் இதுவரை 462.01 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், 7.72 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்த வேண்டியிருப்பதாகவும், இதையும் இந்த மாத இறுதிக்குள் கையகப்படுத்தி, விரிவாக்கப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன
குட்நியூஸ்: இந்நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில எடுப்புப் பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாக தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டு நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பேசும்போது, “தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக தனியாக கண்காணிப்புக் குழுவை முதல்வா் ஸ்டாலின் அமைத்துள்ளாா். புரிந்துணா்வு ஒப்பந்தங்களை செயலாக்கத்துக்கு கொண்டுவருவதில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.
ஸ்டாலின் உறுதி: தொழில் வளா்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளா்ச்சியாக இருக்கும் என்று முதல்வா் ஸ்டாலின் ஏற்கனவே உறுதியளித்திருக்கிறார்.. அதனை நிறைவேற்றும் வகையில், கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான நில எடுப்புப் பணிகளை தமிழக அரசு முடித்துள்ளது. இதன்மூலம், கோவையின் மிகப்பெரிய வளா்ச்சிக்கு பாதை வகுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சாா்ந்த நிறுவனங்கள் கோவைக்கு வரவுள்ளது. அதன் ஒருபடியாக, டிட்கோ மற்றும் டாடா நிறுவனம் இணைந்து பொது பொறியியல் வசதி மையத்தை தொடங்கவுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் கோவையும் தொழில் துறை வளா்ச்சியில் வேகமெடுக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.