ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. டிரோன் ஆபரேட்டர்களுக்கு கோவை காவல் துறை செக்!
கோவை: கோவையில் டிரோன் ஆபரேட்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கோவை காவல் துறை வழங்கியுள்ளது. உரிமம் இல்லாத மற்றும் அரசு இணையதளத்தில் பதிவு செய்யாத டிரோன் ஆபரேட்டர்களுக்கு 1 லட்சம் அபராதம் மற்றும் பெயிலில் வர முடியாதபடி வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் டிரோன் தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக மாறிவிட்டது. வெட்டிங் ஷுட், யூடியூபர்ஸ், டிராவலர்ஸ், விவசாயம் முதல் பாதுகாப்புத் துறை வரை என அனைத்துத் துறைகளிலும் டிரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சில விதிமுறைகள் உள்ளன. சர்வதேச எல்லை, விமான நிலையம், தலைமைச் செயலாகம், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் டிரோன் பறக்க தடை உள்ளது.
ரெட் ஜோன், எல்லோ ஜோன் போன்ற பகுதிகளில் டிரோன்களை பறக்கவிடக் கூடாது. டிரோனைப் பயன்படுத்தி ஈரானில் சமீபத்தில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் ஆகஸ்ட் 8 முதல் 20 ஆம் தேதி வரை எழு அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றில், சுத்திர தின டிரோன் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகை, நந்தனம் மெட்ரோ தலைமையிடம், சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளன. விமான நிலையத்தைச் சுற்றி 5 கிலோமீட்டருக்கு டிரோன் பறக்க அனுமதி இல்லை. ஆனால், அந்த வீடியோ காட்சியில் பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியான சென்னை விமான நிலைய முனையங்கள், ஓடுபாதையில் விமானம் நிற்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ பதிவு பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் டிரோன் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர். மாவட்டத்தில் 3 ஆயிரம் டிரோன் ஆபரேட்டர்கள் உள்ளனர். ஆனால், பதிவுபெற்ற டிரோன் ஆபரேட்டர்கள் 50 பேர் மட்டுமே உள்ளனர். கோவை மாவட்டம் மிகவும் சென்சிட்டிவான ஏரியா என்பதால் டிரோன் ஆபரபேட்டர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் துறையின் மூலம் டிரோன் ஆபரேட்டர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சுமார் 60 உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு டிரோன் பயன்படுத்துவது குறித்த பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது: கோவை மாநகரப் பகுதிகளில் டிரோன் பயன்படுத்தும் நபர்கள், நிறுவனங்கள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. மத்திய அரசின் The Drone Rules 2021 ன் படி டிரோன் பயன்படுத்தும் அனைவரும் டிஜிட்டல் ஸ்கை என்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து UIN (Unique Identification Number) பெற்றிருக்க வேண்டும். மேலும், டிரோன் இயக்கத்திற்கு முறைப்படி பயிற்சி பெற்ற பைலட் மட்டுமே இயக்க வேண்டும்.
அவ்வாறு பயிற்சி பெற்றவர்களும் மேற்படி வலைதளத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். மாநகரப் பகுதிகளில் இதுவரை 57 டிரோன்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக விபரங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மாநகரப் பகுதிகளில் பதிவு செய்யாத நபர்கள் டிரோன் பயன்படுத்துவதாகவும், அனுமதி பெற்ற பைலட்கள் அல்லாத நபர்கள் டிரோன்களை பயன்படுத்துவதாகவும், இயக்குவதாகவும் தெரியவந்துள்ளது.
டிரோன் உரிமையாளர்கள், இயக்குபவர்கள் அனைவரும் மேற்படி “Digital Sky” வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். மேலும், உரிமம் பெறாமல் செயல்படும் டிரோன்கள் காவல் துறை மூலம் பறிமுதல் செய்யப்படும். உரிமம் இல்லாத டிரோன் பைலட்கள் மீதும் உரிமையாளர்களின் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மத்திய அரசு சில பகுதிகளை Red Zone, Yellow Zone என அறிவித்து டிரோன்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை Digital Sky Map மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், திருமணம், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்த முறைப்படி காவல் துறையிடம் பயன்படுத்தும் டிரோன் விவரம், இயக்குபவர் விவரம், பறக்கும் நேரம், உயரம் குறித்து முறைப்படி தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, முறைப்படி Digital Sky இல் பதிவு செய்யாமல் டிரோன் பயன்படுத்துபவர்கள், இயக்குபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசு தடைசெய்துள்ள பகுதிகளான Red Zone, Yellow Zone என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் அவ்வப்போது டிரோன்கள் பறக்க தடை செய்யப்படும் பகுதிகளில் இயக்குபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரோன் ஆபரேட்டர்கள் கட்டாயம் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் டிரோன் இயக்குபவர்கள் மீது மத்திய அரசின் விதிப்படி 1 லட்சம் அபராதம் மற்றும் பெயிலில் வெளி வரமுடியாதபடி வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.