கோவை மக்களுக்கு அலெர்ட்.. இந்த வழியா போகாதீங்க.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
கோவை: கோவை மாநகரில், அவிநாசி சாலை ஹோப்ஸ் பகுதில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்தப் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
கோவை மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று அவிநாசி சாலை. கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் இந்த சாலையே முக்கியமானது. இந்த சாலையின் வழியாகவே திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல முடியும். இந்த சாலையில் முக்கிய நிறுவனங்கள், அதிக அளவிலான பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கோவையின் இதயப் பகுதியாக இந்த சாலை இருப்பதால் முக்கியமான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக, லட்சுமி மில்ஸ், நவஇந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகளால் நிறைந்திருக்கும். இந்நிலையில், இந்த போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை மேம்பாலம் கட்ட தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
10.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 1,621 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020 இல் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ப அவ்வப்போது இந்த சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இங்கு புதிய போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி ரயில்வே மேம்பாலம் அருகில் இன்று முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமானப் பணி நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறை தரப்பிலிருந்து தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை மாநகர காவல் துறை கூறியுள்ளதாவது: காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில்ஸ், எஸ்என்ஆர் சந்திப்பு பிஎஸ்ஜி கல்லூரி வழியாக அவிநாசி மார்க்கம் செல்லும் வாகனங்கள் பயனீர் மில் ரோடு, அவிநாசி ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, காந்திமாநகர் மேம்பாலம், காந்திமாநகர் சந்திப்பு, தண்ணீர் பந்தல் சாலையில் சென்று வலதுபுறம் திரும்பி டைடல் பார்க் சாலை மற்றும் கொடிசியா சாலை வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
அதேபோல, ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி பகுதிகளில் இருந்து அவிநாசி சாலை வழியாக விமான நிலையம் திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் சத்தி ரோடு, கணபதி, விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு வழியாக அவிநாசி சாலைக்குச் செல்லலாம்.
மேலும், உக்கடம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் வழியாக எல்அண்ட்டி பைபாஸ் சென்று குறிப்பிட்ட இடங்களுக்கு எளிதாக செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.