கோவை ஏர்போர்ட் விரிவாக்கம்.. இருகூர் முதல் சின்னியம்பாளையம் வரை.. மொத்தமாக மாறப்போகுது
கோவை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் விமான நிலையத்தில் விமான ஓடுபாதை தூரம் குறைவாக இருக்கும் காரணத்தால், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் இங்கு இறங்க முடியாத நிலை இருக்கிறது.. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியம். இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த படியாக அதிகப்படியான மக்கள் வசிக்கும் நகரம் என்றால் அது கோவை தான். இப்போதை மதிப்பீட்டின் படி சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவை நகர்புறங்களில் வசிப்பதாக தெரிகிறது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளன. பல கல்லூரிகள் உள்ளன. இன்னும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் கோவையை சுற்றி அமைய உள்ளன. வரும் காலத்தில் கோவையில் இப்போது உள்ள மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலில் கோவையில் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வந்து இறங்கும் வகையில் விமான வசதிகள் அவ்வளவாக இல்லை.. கோவை சர்வதேச விமான நிலையம் என்கிற போதிலும், கொச்சி அளவிற்கோ, சென்னை அளவிற்கோ பெரிய விமான நிலையம் இல்லை.. ஏன் திருச்சி அளவிற்கு கூட விமான நிலையம் பெரிய அளவில் இல்லை. கோவையை பொறுத்தவரை சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட உள்நாட்டில் உள்ள பகுதிகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை விமான நிலையத்தில் விமான ஓடுபாதை தூரம் குறைவாக இருக்கும் காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் இங்கு இறங்க போதிய வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, விமான ஓடுதள தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று மக்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு சம்மதித்த அரசு, மொத்தம் 632 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. கணபதி ராஜ்குமார் எம்.பி. தலைமையில் நடந்த கூட்டதில் கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டார். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், கோவை வடக்கு தாசில்தார் மணிவேல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் விமான நிலைய விரிவாக்க பணியை மேற்கொள்ள நிலம் கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்
இந்த கூட்டத்திற்கு பின்னர் கோவை கலெக்டர் கிராந்திகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கோவையின் சிங்காநல்லூர், இருகூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் ஆகிய கிராமங்களில் மொத்தம் 632.95 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் 468.83 ஏக்கர் நிலம் தனியார் பட்டா நிலங்கள் ஆகும். 134.32 ஏக்கர் நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது ஆகும்.
29.82 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். பட்டா நிலத்தில் இதுவரை 462.01 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 7.72 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்த வேண்டும். இந்த நிலம் இந்த மாத இறுதிக்குள் கையகப்படுத்திவிடும். இதுவரை 97 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து உள்ளன.இந்த பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரத்து 88 கோடி அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,848.65 கோடி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையாக வழங்கப்பட இருக்கிறது” என்றார்.
இதனிடையே கோவை எம்பி கணபதி ராஜ்குமார் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், விமான நிலைய விரிவாக்க பணிகளால் இருகூர் முதல் சின்னியம்பாளையம் வரை செல்லும் சாலை தடைபடும். எனவே அதற்கு மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-வது சாலையாக எல் அண்டு டி சாலை இருகூர் வழியாக விமான நிலையம் வந்தடையும் வகையில் அமைக்கப்பட உள்ளது. விரைவில் கோவை விமான நிலைய விரிவாக்க பணி தொடங்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்” இவ்வாறு கணபதி ராஜ்குமார் எம்பி கூறினார்.