GamesNews

உலகிலேயே மிகப்பெரியதாக உருவாகும் கோவை கிரிக்கெட் மைதானம்? 300 ஏக்கர்? உண்மை என்ன?

கோவை: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்பட உள்ளதாகவும், 300 ஏக்கர் பரப்பளவில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவி வரும் நிலையில், இது வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்தியுள்ளது.

கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம்: அந்தவகையில் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க 20 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ள பகுதியை கண்டறியும் பணி நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அந்த இடம் சேலம் – கொச்சி நெடுஞ்சாலையில் இருப்பதால், அப்பகுதியில் மைதானம் அமைப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, நிலத்தை விளையாட்டுத்துறைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும்” என்று அறிவித்தார். இதையடுத்து, தற்போது கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன.

டெண்டர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்பந்தம் கோரியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானம், பெங்களூர் சின்னச்சாமி மைதானம் ஆகியவற்றை மாதிரிகளாக கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்து ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரவி வரும் தகவல்: இந்நிலையில், கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் பற்றிய ஒரு தகவல் திடீரென பரவியது. கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் உலகத்திலேயே மிகப்பெரியதாக அமைக்கப்பட உள்ளதாகவும், 300 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது. 

உண்மை என்ன?: இந்நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக் குழு, இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை 300 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாக பரவி வரும் தகவல் பொய்யானது என தெரி விக்கப்பட்டுள்ளது. 

கோவையில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானம், 30 ஏக்கர் பரப்பளவில் தான் அமைய உள்ளது, 300 ஏக்கர் பரப்பளவில் அல்ல. இந்த ஸ்டேடியம் உலகத் தரத்தில் அமைக்கப்பட உள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், உலகிலேயே மிகப்பெரிய அளவில், மிக அதிகமான இருக்கைகளுடன் இந்த மைதானம் அமைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button