கோவை விமான நிலைய விரிவாக்கம்.. முதல்வரிடம் நேரில் சந்திக்க நேரம் கேட்ட வானதி சீனிவாசன்
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் கோவை தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 18 ம் தேதி “கலைஞர்” நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு இன்று காலை வருகை தந்தார். முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். அத்திட்டத்தினால் பயன்பெறும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெபிட் கார்டுகளை வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது. பின்னர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களையும் அவர் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழாவில் வானதி சீனிவாசனுக்கு விழா மேடையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், வானதி சீனிவாசனுடன் சிறிது நேரம் பேசினார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழ்ப் புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு முதல்வர் தனக்கு நன்றி தெரிவித்தார். இந்த கல்லூரி தன்னுடைய தொகுதியில் வருகின்றது என அவரிடம் தெரிவித்தேன். மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும், கோவை தெற்கு தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாகவும் நேரில் பேச நேரம் ஒதுக்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் கண்டிப்பாக பேசலாம் என்று தெரிவித்துள்ளார். வரும் 18 ம் தேதி “கலைஞர்” நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். நீங்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தன்னிடம் சொன்னார் என்றார்.