பூரிக்குதே கோயம்புத்தூர்..கோவை உக்கடம் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் -சபாஷ்
கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் புதிய மேம்பாலம் மற்றும் பல்வேறு அரசு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கோவையை பொறுத்தவரை தொழில் நகரம் என்பதால், வேகமாக முன்னேறிகொண்டிருக்கிறது.. இதனால், வடமாநிலம் உட்பட ஏராளமானோர் கோவையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்தவகையில், கோவை நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், கோவையின் புறநகர் பகுதிகளில்கூட, போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது.
நெரிசல்: குறிப்பாக, உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையானது எப்போதுமே டிராபிக் அதிகரித்து காணப்படும். அதனால்தான், இந்த நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, உக்கடம்-ஆத்துப்பாலம், திருச்சி ரோடு ஆகிய சாலைகளில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்தது..
உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை 4 வழித்தட மேம்பாலம் அமைக்கும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு முதற்கட்டமாக பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு நடந்து வந்தன.. பிறகு இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, சுமார் 127.50 கோடி ரூபாய் செலவில் பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது.
ஆத்துப்பாலம்: இதனை தவிர, ஆத்துப்பாலம் – உக்கடம் வரை முதல் பிரிவாக கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி ஆத்துப்பாலம் – பொள்ளாச்சி சாலை பாலக்காடு சாலை மற்றும் சுங்கம் சாலை ஆகியவற்றின் பணிகள் என அனைத்து பணிகளும் தனியாக நடந்து வந்தன.
மொத்தத்தில், ரூ.460 கோடியில், உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி 2 கட்டங்களாக நடந்து வந்த இந்த மேம்பால பணிகள் அனைத்தும் தற்போது முழுமை பெற்றுவிட்டன.. இதையடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த மேம்பாலத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின்: அந்தவகையில், கோவை அரசு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார். அத்துடன், கோவை வடவள்ளி செல்லும் லாலி ரோடு சந்திப்பில் அமைய உள்ள புதிய மேம்பாலம், செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்..
இதைத்தவிர, பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம், கோவை வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, கோவை கடலைக்கார சந்தில் புதிதாக கட்டப்பட்ட ஆதரவற்றோர் தங்கும் விடுதி, கோவை புலியகுளம் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் போன்றவற்றையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
புதிய பாலம்: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 12.30 மணியளவில் கணியூரில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். 12.45 மணியளவில் புறப்பட்டு 1 மணியளவில் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.