உலகம் SCO நாடுகளின் முதல் கூட்டுப் பயிற்சி சீனாவில், இந்தியா பங்கேற்பு
இந்தியா உள்பட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (எஸ்சிஓ) அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் சீனாவில் முதன்முறையாக கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் பங்கேற்றன. ‘இன்டர்அக்ஷன் 2024’ எனப்படும் இந்த பயிற்சி அண்மையில் வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்ஞர் தன்னாட்சிப் பகுதியில் நடைபெற்றதாக சீன பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
இந்த பயிற்சி கூட்டு நேரடி பயிற்சிகளுக்கான புதிய மாதிரியை நிறுவியதுடன், எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் கூட்டு செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தியது. எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த பயிற்சியை கண்காணித்தனர், இதில் முழு சுவச உடைகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் மூலமாகவும், சிலர் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், சிலர் ரோபோ நாய்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் புகைப்படங்களை சீன அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டது.
உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பரவியுள்ள நிலையில், உறுப்பு நாடுகளின் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் திறன்கள் மற்றும் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த நேரடி பயிற்சி நடைபெற்றது, இதில் இந்தியா உள்பட அனைத்து உறுப்பு நாடுகளும் முதல்முறையாக பங்கேற்றன.
பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட எஸ்சிஓ, அதன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்புடன் (ஆர்ஏடிஎஸ்) பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய பிராந்திய சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட எஸ்சிஓ அமைப்பில் பெலாரஸ் இந்த மாத தொடக்கத்தில் 10ஆவது அதிகாரபூர்வ உறுப்பு நாடாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.