தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து, சின்னத்திரைக்கு தணிக்கை வாரியம் அமைக்க வேண்டுமென கோவில்பட்டியில் போராட்டம் நடைபெற்றது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவாக தடை செய்ய வேண்டுமெனக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன் வரை இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது நடைபெற்று வரும் சீசனுக்கு நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருக்கிறார்.
பல்வேறு துறைகளில் பிரபலமாக விளங்குபவர்களை 100 நாள்கள் ஒரே வீட்டில் அமர்த்தி, பல்வேறு போட்டிகளை நடத்தி, 100 நாள்கள் முழுவதும் அதே வீட்டில் தாக்குப்பிடித்து இருப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். மேலும், சரியாக பங்கேற்காதவர்கள் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர். இவை அனைத்தும் பல கேமராக்கள் கொண்டு பதிவு செய்யப்பட்டு, மக்களுக்கு ஒளிபரப்பப்படும்.
அந்த வகையில் தற்போதைய சீசனில், தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி, விஜே விஷால், முத்துக்குமரன், சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா, ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இவர்களில் சிலர் வெளியேற்றப்பட்ட நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக மேலும் சிலர் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி முதல் சீசன் ஒளிபரப்பான போதே கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதாகவும், நம் பண்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியினால் இளம் தலைமுறையினர் சீர்கெடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், சினிமாவில் இருப்பதை போன்று சின்னத்திரைக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.