சிட்டகாங்: பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டம் நடத்திய ஹிந்துக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த உஸ்மான் அலி, ஹிந்து சமூகத்தினருக்கு எதிராகவும், இஸ்கான் அமைப்பு குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அவரது பதிவைக் கண்டித்து கடந்த 5ம் தேதி, உஸ்மான் அலியின் கடை முன்பு இந்து சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஹிந்து, முஸ்லீம் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து, வங்கதேச ராணுவம் உள்பட பாதுகாப்பு படையினர் ஹஷாரி காலி பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும், அங்கிருந்த பொதுமக்களை பாதுகாப்பு படையினர் ஓட ஓட விரட்டியடித்தனர். இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் கல்வீசியும், ஆசிட் வீசியும் நடத்திய பதில் தாக்குலில், 9 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 582 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து சமூகத்தினர் மீது வங்கதேச ராணுவம் தாக்குதல் நடத்தும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ‘சிட்டகாங்கில் இன்றைய நிலை, ஹிந்துக்கள் vs ராணுவம்,’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹசாரி காலி ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு பெரும்பாலான ஹிந்துக்கள் கடைகளை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போதைய வங்கதேச ராணுவத்தின் ஒடுக்குமுறை பணிகளால், ஹிந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.