நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சிக் கொடி, பாடலை அறிமுகம் செய்தார்.
இதைத் தொடர்ந்து அண்மையில் விக்ரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி கொள்கை, முக்கிய அறிவிப்புகளை கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டார். விஜய்யின் பேச்சுக்கு பலர் வரவேற்றும், சிலர் விமர்ச்சித்தும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த அவரிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “வரட்டும், கமலை போன்று விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும். அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது. விஜய் தற்போது அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை. விஜயால் அரசியலில் சாதிக்க வாய்ப்பு இல்லை. முயற்சி செய்து பார்க்கட்டும்.
அரசியல் ஆசை விஜய்க்கு உள்ளது. அதனால் வந்துள்ளார். வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது.
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவரின் செயல்பாடுகளை பார்க்கலாம். எனினும், தமிழ்நாட்டில் விஜயால் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம்” என்று கூறினார்.