கோவை; தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று திரும்பியவர்களால் கோவை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது.
தீபாவளிப் பண்டிகை அக்., 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளிக் கல்லுாரிகள் அக்., 30ம் தேதி முதல் விடுமுறை அறிவித்தன. தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.,1ம் தேதி அரசு விடுமுறை அறிவித்தது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால், பலரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இதையடுத்து, ரயில்வே நிர்வாகம், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிக் கல்லுாரிகள், அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் நேற்று மீண்டும் கோவை திரும்பத் துவங்கினர்.
இதன் காரணமாக, கோவை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று மதியம் முதல் பயணிகள் அதிகளவில் வரத்துவங்கினர். இதனால் ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து வந்த ரயில்களிலும் பயணிகள் வந்ததால், கூட்டம் அலைமோதியது. போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், பஸ் ஸ்டாண்ட்களிலும் சொந்த ஊர் சென்று திரும்பியவர்களால் அதிகளவில் கூட்டம் இருந்தது.