சென்னையில் வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அன்றாட சமையலில் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது. சாம்பார், வெரைட்டி ரைஸ் என எதுவாக இருந்தாலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று வெங்காயத்தின் விலை திடீரென ரூ.40 வரை உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ வெங்காயம், ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து, இன்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1,300 டன் நாசிக் வெங்காயம் வரும் நிலையில், இன்று 500 டன் மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.